தமிழகத்தில் அராஜக ஆட்சி நடக்கிறது, ஜெ. மீதான மரியாதை குறைந்துவிட்டது: நடிகர் கார்த்திக்
நெல்லை: தமிழகத்தில் அராஜக ஆட்சி நடப்பதாக மறுகால்குறிச்சியில் நடந்த கூட்டத்தில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரால் சுட்டுக் கொல்லப்பட்ட வானுமாமலையின் குடும்பத்தாரை அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
வானுமாமலையி்ன் மனைவி்க்கு ஆறுதல் கூறிய அவர் ரூ.50,000 நிதியுதவி வழங்கினார். பின்னர் அவர் வானுமாமலை சுடப்பட்ட கோவில் முன்பு இருந்து டிராக்டரில் நின்றபடி பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
இன்ஸ்பெக்டர் நடத்திய துப்பாக்கிச்சூட்டினால் ஒரு குடும்பம் தெருவில் நிற்கின்றது. முதல்வர் மீது மரியாதை வைத்திருந்தேன். தற்போது அது மங்கிவிட்டது. மணல் கொள்ளை என்று கூறுபவர்கள் கோடி, கோடியாகக் கொள்ளையடித்து வெளிநாட்டில் பதுக்கி வைத்திருப்பதை பிடிக்க முடியுமா? இன்ஸ்பெக்டர் வெறும் அம்பு மட்டும்தான், அதனை எய்தவர்களின் விபரம் விரைவில் வெளிவரும்.
ரூ.3 லட்சமும், வேலையும் கொடுக்க முடிந்தவர்களுக்கு குழந்தைகளின் தந்தையை கொடுக்க முடியுமா? இந்த விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் வரை போராடுவோம். வானுமாமலை குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். தமிழகத்தில் அராஜக ஆட்சி நடக்கிறது. இதற்காகத்தான் ஓட்டு போட்டோமா என்று மக்கள் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளனர் என்றார்.
Post a Comment