50க்கும் மேற்பட்ட தொடர்களை தயாரித்துவிட்ட ஏ.வி.எ


சினிமா தயாரிப்பு நிறுவனம் சின்னத்திரையில் சாதனை படைப்பது சாதாரண விசயமில்லை. ஆனால் 175 திரைப்படங்களை இயக்கிய ஏ.வி.எம் நிறுவனம் தென்னிந்திய தொலைக்காட்சிகளில் 50க்கும் மேற்பட்ட தொடர்களை இயக்கி சாதனை படைத்துள்ளது.
தொலைக்காட்சி மட்டும் இல்லையென்றால் ஏ.வி.எம் நிறுவனம் என்றோ இல்லாமல் போயிருக்கும் என்று ஏ.வி.எம். சரவணன் ஒருமுறை
தொலைக்காட்சியில் பேட்டியளித்தபோது கூறினார். தொலைக்காட்சி நிறுவனங்களின் வளர்ச்சியைப் போலவே ஏ.வி.எம் நிறுவனத்தின் தொடர்களும் வளர்ச்சியடைந்துள்ளன என்றால் மிகையாகாது.
1986 ம் ஆண்டு தூர்தர்சனில் ஒளிபரப்பான ‘ஒரு மனிதனின் கதை’ தொலைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ரகுவரன், தேவிலலிதா நடித்த அந்த தொடரின் கதை சிவசங்கரியுடையது. ஏ.வி.எம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். இதனை தொடர்ந்து நேற்றைய மனிதர்கள், நாணயம், முத்துக்கள், எனக்காகவா ஆகிய குறுந்தொடர்கள் தூர்தர்சனில் ஒளிபரப்பானது.
சேட்டிலைட் சேனல்களின் வருகைக்குப் பின்னர் சன் தொலைக்காட்சியில் நிம்மதி உங்கள் சாய்ஸ் என தொடங்கிய ஏ.வி.எம், ஆச்சி இண்டர்நேசனல், சொந்தம், கலாட்டா குடும்பம், வாழ்க்கை, என தொடர்ந்தது. பின்னர் சூர்யா, ஜெமினி, பத்துக்கும் மேற்பட்ட தொடர்களை தயாரித்து வெளியிட்டது. கலைஞர் டிவி தொடங்கப்பட்ட பின்னர் வைரநெஞ்சம், வைராக்கியம் என தொடர்கிறது. மா டிவி, ராஜ் டிவியிலும் எ.வி.எம் தொடர்களை தயாரித்து வெளியிட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் ஏவிஎம் நிறுவனம் 50க்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் 7500 எபிசோடுகள்வரை ஒளிபரப்பாகியுள்ளன என்று அந்த நிறுவனம் பெருமை பொங்க புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.